"திரைத்துறையில் திருடர்களுக்கு கொண்டாட்டம்'’என்கிற வழக்கத்திற்கு நீதிமன்றத் துணையோடு ‘ஆப்பு’ அடித்திருக்கிறார் "இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன்'’ எனப் புகழ்பெற்ற கே.பாக்யராஜ்.

Advertisment

vijay

பெரிய ஹீரோ விஜய், பெரிய டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், பெரிய தயாரிப்பு நிறுவனம் ‘"சன் பிக்ஸர்ஸ்'’ என்கிற பலம் பொருந்திய கூட்டணிக்கு அஞ்சாமல்... “""2007-ஆம் ஆண்டில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உதவி இயக்குநர் வருண் பதிவு செய்த ‘"செங்கோல்'’கதையும், இப்போது விஜய்யை வைத்து முருகதாஸ் எடுத்திருக்கும் "சர்கார்'’கதையும் ஒரே கதைதான்.

தன் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டதால் நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை ரத்து செய்ய வைக்கிறான் ஹீரோ. இதனால் அரசியல்வாதிகளின் கோபத்திற்கு ஆளாகிறான். இதன் தொடர்ச்சியாக தேர்தலில் நின்று ஜெயிக்கிறான் ஹீரோ, அவனைத் தேடி முதலமைச்சர் வாய்ப்பு வருகிறது. ஹீரோ என்ன முடிவு எடுத்தான்? என்பதுதான் ‘"செங்கோல்'’மற்றும் "சர்கார்'’கதை'' எனச் சொல்லி தெறிக்கவிட்டார் பாக்யராஜ்.

Advertisment

திரைக்கதையில் வேறு மாதிரியான ட்ரீட்மெண்ட்டை முருகதாஸ் கொடுத்திருந்தாலும் கதை ஒன்றுதான் என்கிற இந்த உண்மையை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் வருண். இந்த வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது எழுத்தாளர் சங்கம் சார்பில் பாக்யராஜ் கொடுத்த கடிதம்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார்கள் பாக்யராஜ், முருகதாஸ், சன் பிக்ஸர்ஸ் மற்றும் வருணின் வக்கீல்.

வருணுடன் சமரசமாகிவிட்டதாக சன் பிக்ஸர்ஸ் தரப்பிலும், இந்தப் பிரச்சினையில் சமரசம் செய்துகொள்வதாக வருண் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

""எங்களுடைய ‘"சர்கார்'’ படக்கதை வருணுடைய மூலக்கதைதான்''’என வழக்கின்போது ஒப்புக்கொண்டதையடுத்து, ‘"சர்கார்'’பட டைட்டிலில் ‘"கதை-நன்றி'’என வருண் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.

விஜய்யின் "சர்கார்' அமைய எனது "செங்கோலை' தந்துவிட்டதாக’ வருண் சொல்லியுள்ளார். இந்த விஷயத்தில் பாக்யராஜ் காட்டிய உறுதிக்கும் நேர்மைக்கும் சல்யூட் அடிக்கிறது திரையுலகம்.

வழக்கு முடிக்கப்பட்ட நிலையில்... “""எனது கதைதான் ‘சர்கார். இதில் எந்த மாற்றமுமில்லை. உதவி இயக்குநர் வருணை ஊக்குவிப்பதற்காகவே "சர்கார்'’டைட்டிலில் அவரின் பெயரைப்போட சம்மதித்துள்ளோம்''’எனச் சொல்லியுள்ளார் முருகதாஸ்.

bhagyaraj-murugadoss

முருகதாஸ் இயக்கிய "ரமணா' படத்தின்போது உதவி இயக்குநர் நந்தகுமார் ""என் கதை திருடப்பட்டுவிட்டது''’என்கிற புயலைக் கிளப்பினார்.

"கஜினி' படத்திற்கு கதைத் திருட்டு குறித்து முருகதாஸ் மீது ஹாலிவுட்டிலிருந்தே குற்றச்சாட்டு கிளம்பியது.

பிரபல ஆங்கிலப் பட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், தனது சகோதரர் ஜோனாதன் நோலன் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி, இயக்கி, 2000-ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்ட படம் "மெமண்டோ.'

2008-ல் சூர்யா நடிக்க தமிழிலும், 2008-ல் அமீர்கான் நடிக்க இந்தியிலும் "கஜினி'’படத்தை இயக்கினார் முருகதாஸ்.

சில வருடங்களுக்கு முன் டைரக்டர் கிறிஸ்டோபர் நோலனைச் சந்தித்தார் பாலிவுட் ஹீரோ அனில்கபூர். அப்போது அனிலிடம், ""உங்க ஊர்ல என்னோட "மெமண்டோ'’படத்தை காப்பியடிச்சு ஒரு படம் எடுத்தாங்க''’எனச் சொல்ல... ""ஆமாம்... அந்தப் படம் "கஜினி'. நல்ல ஹிட்டாச்சு, நல்ல வசூல் செஞ்சுச்சு''’என அனில் சொல்ல... ""எங்க படத்தோட கதையை காப்பியடிச்சதுக்கு ராயல்டியோ, கிரடிட்டோ அந்த டைரக்டர் தரவில்லை''’எனச் சொல்லியிருக்கிறார் நோலன். இதை அனில், அமீர்கானிடம் தெரிவிக்க... ""அப்படியா?''’என பரிதாபப்பட்டதோடு நிறுத்திக்கொண்டாராம் அமீர்.

முருகதாஸ் "கத்தி'’படத்தை எடுத்ததும் அவர்மீது கதைத் திருட்டுப் புகாரை அளித்தார் மீஞ்சூர் கோபி. மேலும் சிலரும் "கத்தி'’கதைக்கு உரிமைகோரி நீதிமன்றங்களில் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

-இப்படி தன் சினிமா பயணத்தில் தொடர்ந்து கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கிவருகிறார் முருகதாஸ்.

varun""உசுப்பேத்துறவங்ககிட்ட "உம்'முனும், கடுப்பேத்துறவங்ககிட்ட "கம்'முனும் இருந்தா, வாழ்க்கை "ஜம்'முனு இருக்கும்''’என "சர்கார்'’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார் விஜய். இது ஒருவகையில் நியாயமான பேச்சுதான்.

ஆனால்...

""தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக இருக்கும் விஜய், தனது படத்தின் கதை சம்பந்தமான சர்ச்சைகளில் கூட ‘"உம்'முனும், ‘"கம்'முனும் ‘ஜாலியா வேடிக்கை பார்ப்பது நல்லாவா இருக்கு? "நான் "மூத்தகுடி'’ என்ற பெயரில் சென்னை கே.கே.நகர் சிவன் பார்க்கில் வைத்து ஏ.ஆர்.முருகதாஸிடம், சொன்ன கதையைத்தான் திருட்டுத்தனமாக ‘"கத்தி'’ என்ற பெயரில் விஜய்யை வைத்து முருகதாஸ் எடுத்திருக்கார்'’என மீஞ்சூர் கோபி என்கிற கோபி நைனார் கதறியபோதுகூட விஜய் "கம்'முனுதான் இருந்தார்.

"விஜய்யின் "சர்கார்'’படம் எனது ‘"செங்கோல்'’கதையை திருடி எடுக்கப்பட்டது. இந்தக் கதையை நான் பல வருடங்களுக்கு முன்பே விஜய்யிடம் சொல்லியுள்ளேன்'‘என உதவி இயக்குநர் வருண் (எ) ராஜேந்திரன் கதறியபோதும் "கம்'முனே இருந்துவிட்டார் விஜய்.

"நான் முதலமைச்சரானால்...'’என மேடைகளில் பேசும் விஜய், தனது படம் சம்பந்தமாக வரும் சர்ச்சையைக்கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்பது சரிதானா?

விஜயகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய "ரமணா'’படம் வந்தபோது பி.வாசுவிடம் உதவியாளராக இருந்த நந்தகுமார் கதைத் திருட்டு புகார் சொன்னதும், நந்தகுமாரையும், முருகதாஸையும் அழைத்துப் பேசிய விஜயகாந்த், அதில் அடிப்படை உண்மை இருப்பதை அறிந்து, தான் நடித்த "தென்னவன்'’ படத்தை இயக்கும் வாய்ப்பை நந்தகுமாருக்கு வழங்கினார்.

விஜயகாந்த் போல விஜய் கால்ஷீட் தரத் தேவையில்லை. ஆனால் குறைந்தபட்சம் கதையைப் பறிகொடுத்ததாகச் சொல்பவர்களின் குரலை காது கொடுத்து கேட்கலாமே?''’என்கிற கேள்வி பொதுவெளியிலும், சினிமாத்துறையிலும் விஜய்யை நோக்கி நீண்டிருக்கிறது.

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா... மேட்டர் ஓவர்...' என பெருமூச்சு விட்டால்... அடுத்தொரு கதைப் பஞ்சாயத்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் நடக்கப்போகிறதா தகவல் சொன்னார்கள்.

விசாரணையில் இறங்கினோம்.

ஜினியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரும் உயர்வையும், திருப்பத்தையும் ஏற்படுத்திய படம் "மூன்று முகம்.' இந்தப் படத்தை 1982-ல் தயாரித்து வெளியிட்டது சத்யா மூவீஸ்.

இந்தப் படம் பக்கா கமர்ஷியல் ஃபார்முலா கொண்ட கதை என்பதால்... இதை ரீ-மேக் செய்ய சில ஹீரோக்கள் முயற்சித்தனர். லாரன்ஸ் ராகவேந்திராவும் ஆசைப்பட்டார். தன் ஆசையை "ஆடுகளம்',’"ஜிகர்தண்டா'’உட்பட பல படங்களைத் தயாரித்தவரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளருமான "ஃபைவ் ஸ்டார்'’கதிரேசனிடம் தெரிவித்தார். தமிழிலும், தெலுங்கிலும் லாரன்ஸை வைத்து ‘"மூன்று முகம்'’ படத்தை ரீ-மேக் செய்ய விரும்பி... சத்யா மூவீஸுடன் பேச்சு நடத்தி, முப்பது லட்ச ரூபாய்க்கு கதையின் உரிமையை வாங்கினார் கதிரேசன்.

இது ஒருபுறமிருக்க...

விஜய்யின் "மெர்சல்'’படத்தை தொடங்கியபோது "மூன்று முகம்'’டைட்டிலை சத்யா மூவீஸிடம் கேட்டபோது... “கதிரேசனுக்கு "மூன்று முகம்'’ரீ-மேக் உரிமை விற்கப்பட்டுள்ளதால் "தருவதற்கு சாத்தியமில்லை'’என சத்யா மூவீஸ் சொல்லிவிட்டது.

விஜய், டைரக்டர் அட்லீ கூட்டணியின் "மெர்சல்' படம் வெளியானது. இதில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். "மெர்சல்'’படம் பார்த்தவர்கள் முதலில்... "இது கமலின் ‘"அபூர்வ சகோதரர்கள்'’படத்தின் சாயல் தெரிகிறது'’எனச் சொல்ல... அந்தச் சமயம் விஜய்யும், அட்லியும் கமலைச் சந்தித்தபோது... தன் அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த "அபூர்வ சகோதரர்கள்'’போஸ்டர் பின்னணியில் விஜய்யும், அட்லியையும் நிற்கவைத்து, தானும் நின்று புகைப்படம் எடுக்க வைத்தார் கமல் சூசகமாக.

அதன்பின் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் “நாங்கள் "மூன்று முகம்'’படத்தை ரீ-மேக் செய்ய ரைட்ஸ் வாங்கியிருக்கும் நிலையில், அந்தக் கதையை அட்லி உல்டா பண்ணி "மெர்சல்'’படம் எடுத்திருக்கிறார்''’என புகார் அளித்துள்ளார் கதிரேசன்.

எழுத்தாளர் சங்கத்தின் முந்தைய விசு தலைமையிலான நிர்வாகத்திற்கும், இப்போதைய பாக்யராஜ் தலைமையிலான நிர்வாகத்திற்கும் பிரச்சினை இருந்ததாலும், "மெர்சல்'’ரிலீஸாகிவிட்டதாலும், இந்தப் புகாரை ஆறப்போட்ட சங்கம், ‘"சர்கார்'’ தீபாவளிக்கு ரிலீஸ் என்பதால் உடனடியாக அந்தப் புகாரை விசாரித்தது.

அடுத்து "மூன்று முகம்',’"மெர்சல்'’புகாரை விசாரிக்கவுள்ளது சங்கம்.

தை உல்டா சர்ச்சையில் சிக்கியிருக்கும் அட்லி, அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பதாகவும்... கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் முருகதாஸ், அடுத்து ரஜினியை வைத்து இயக்கப்போவதாகவும் நம்பத் தகுந்த தகவல்கள் வருகின்றன.

சர்ச்சை வராமல் இருந்தால் சரி!

-ஆர்.டி.எ(க்)ஸ்